புகார் கொடுத்த 3 மணி நேரத்திலேயே தலையணையில் மறைத்து வைக்கப்பட்ட பணத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் சந்தபீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முருகன் என்பவரது ஆட்டோவில் திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சந்தபீவி டெல்லி விரைவு ரயிலில் ஏறிய பிறகு தலையணையில் தான் மறைத்து வைத்திருந்த 90 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சந்தபீவி தனது மகனான முகமது காசிம் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பின் முகமது காசிம் பணத்தோடு காணாமல் போன தலையணையை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் அது கிடைக்காததால் முகமது காசிம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ டிரைவரான முருகன் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சந்தபீவியை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு வந்த பிறகு ஆட்டோவில் பழைய துணி மூட்டை ஒன்று கிடப்பதை முருகன் பார்த்துள்ளார்.
அதனை யாரோ தவறுதலாக ஆட்டோவில் வைத்து விட்டு சென்றதாக நினைத்து முருகன் அந்த தலையணையை சாலையோரம் தூக்கி வீசியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோ டிரைவரான முருகன் காண்பித்த இடத்தில் சென்று பார்த்தபோது பணத்துடன் கூடிய அந்த தலையணை அங்கேயே கிடந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் தலையணையில் மறைத்து வைத்திருந்த அந்த பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டனர். இவ்வாறு புகார் அளித்த 3 மணி நேரத்திலேயே விரைவாக செயல்பட்ட காவல்துறையினரை மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் பாராட்டியுள்ளார்.