மது பாட்டில் கண்ணாடியால் குத்தி விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமநாயக்கன்பாளையத்தில் விவசாயி கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் சிந்து தேவி திருமணம் முடிந்து கோவையில் தனது கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதில் கோபாலுக்கு சொந்தமாக மாட்டுத்தொழுவம் ஒன்று நாகமநாயக்கன்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் வழியில் இருக்கின்றது. அங்கு கோபால் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். அதில் பசு மாடு ஒன்று கன்று குட்டி ஈனும் நிலையில் இருந்ததால் அதனை பார்ப்பதற்காக கோபால் அங்கு சென்றுள்ளார். எனவே நீண்ட நேரமாகியும் கோபால் வராததால் அவருடைய செல்போன் எண்ணிற்கு ராஜேஸ்வரி தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் கோபால் செல்போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ராஜேஸ்வரி அவரை தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் மாட்டு தொழுவத்திற்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் கோபால் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலின் சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோபால் தலை பகுதியில் வீக்கம் இருந்தது. மேலும் நெற்றியில் மது பாட்டிலால் ஆழமாக குத்திய காயம் இருந்தது.
அவரது உடல் அருகில் மது பாட்டில் நொறுங்கி கிடந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஆகவே மர்ம நபர்கள் மது பாட்டிலால் கோபாலை தலையில் அடித்ததோடு, பின் நெற்றியில் குத்தியதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கோபாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபாலை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.