6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகின்றார். இவர் தறி பட்டறை தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தங்கராசு வேலைக்கு செல்லாமல் கடந்த 2018-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, தங்கராசு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து தங்கராசு அந்த சிறுமியிடம் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு சென்ற சிறுமி அழுது கொண்டிருந்ததை கண்டு பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் தங்கராசு மீது வழக்குப்பதிவு செய்ததோடு, கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்த வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக தங்கராசுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் நீதிபதி வழங்கியுள்ளார். இந்த அபராதத் தொகையை தங்கராசு செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனை தங்கராசு ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக தமிழக அரசு கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.