நிலத்தகராறில் வாலிபர் ஆசிரியர் வீட்டுக்கு தீவைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் மணங்காடு பகுதியில் சுப்பிரமணியன்-ராஜலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி சதாசிவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் சுப்பிரமணியனின் விவசாய தோட்டத்திற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமாக நிலம் இருக்கின்றது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் கடந்த 2 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நிலத்தகராறில் சுப்பிரமணியன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது சிவக்குமார், சுப்பிரமணியனை பார்த்து நான் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்றும் உன்னுடைய விவசாய நிலத்தில் எனக்கு பங்கு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சிவக்குமார் உன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள கிணறு எனக்கு சொந்தமான இடத்தில் இருக்கிறது என்று சுப்பிரமணியாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் உன் வீட்டை தீ வைத்து கொளுத்துவேன் என்று சிவக்குமார், சுப்பிரமணியனை மிரட்டியுள்ளார்.
அதன்பின் சுப்பிரமணியன் தனது குடும்பத்தினரின் உயிரை கருத்தில் கொண்டு அனைவரும் உறவினர் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் வீடு தீப்பிடித்து எறிந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு தீ வைத்ததற்கான அடையாளங்கள் இருந்தது. இந்த தீ விபத்தினால் வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் என பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. அதுமட்டுமின்றி தீ வைத்ததில் வீட்டிலிருந்து சிலிண்டரும் வெடித்ததாக தெரிகின்றது. இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.