உலக சுகாதார மையம், வடகொரிய அரசு, சீனா அனுப்பிய 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டிற்கு அனுப்புமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறது.
ஐ.நா. வின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, உலக அளவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்புங்கள் என்று வடகொரியா கூறியதாக தெரிவித்திருக்கிறார். அதற்கு முன்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட கோவேக்ஸ் திட்டத்தில், சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரிய நாட்டிற்கு அனுப்பப்பட்டது.
வடகொரிய நாட்டில், கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வரைக்கும் கொரோனா பாதிப்பு எவருக்கும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, சுகாதார ஊழியர்களுக்கு, சில அறிகுறிகள் இருந்துள்ளது. எனினும், பரிசோதனையில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக உலக சுகாதார மையம், அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
கொரோனா பரவல் ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போது வரை வடகொரியா கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தன் எல்லைகளை முழுவதுமாக அடைத்துவிட்டது. வடகொரியா தடுப்பூசிகளை வேண்டாம் என்று கூறுவது, இது முதல் தடவை அல்ல. கடந்த ஜூலை மாதத்திலும், சுமார் 20 லட்சம் தடுப்பூசிகளை நிராகரித்திருக்கிறது.