தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அசாம் ஆகும். அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அவ்வாறு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அந்த மாநிலத்தை சுற்றியுள்ள பல மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கானது ஏராளமான கிராமங்களில் புகுந்ததால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் உள்ள 34 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நல்பாரி, தர்ராங் மற்றும் லகிம்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்து உள்ளனர். இதனைத்தொடர்ந்து மஜூலி மற்றும் பார்பேட்டா மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அசாம் மாநிலத்தில் உள்ள 1300 கிராமங்களில் 39500 ஏக்கர் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 85 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம்களில் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசிய பூங்காவிலும் 70 சதவிகித பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதில் பத்து மான்கள் மற்றும் ஒரு குரங்கு ஆகிய விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், பள்ளிகள் மற்றும் அரசு தனியார் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.