வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியில் விக்னேஸ்வரன்- கார்த்திகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகா தனது குடும்பத்துடன் கடந்த 27-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திகா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ஒரு வெள்ளி டம்ளர், செல்போன், 8 ஆயிரம் ரூபாய் போன்றவை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்திகா கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி, முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் நகை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தொடர்புடைய வட செறுபனையூர் காலனி தெருவைச் சேர்ந்த அன்பு, மணிகண்டன், ஆரியலூர் கீழத் தெருவை சேர்ந்த காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கார்த்திகா வீட்டில் திருடியதும், முத்துப்பேட்டை பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.