முதியவர்களை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டு மூலமாக பணத்தை திருடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஏ.டி.எம் கார்டு மூலமாக பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி வாலிபர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் அந்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் மையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து வாலிபரை பிடிக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செட்டித் தெருவில் இருக்கும் ஏ.டி.எம் மையம் வாசலில் சந்தேகப்படும் படியாக ஒருவர் நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் பல நாட்களாக ஏ.டி.எம் மையங்களில் முதியவர்களை ஏமாற்றி பணம் திருடி வந்த வாலிபர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போது காவல்துறையினரின் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் திடீரென இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் அவரை விடாமல் துரத்தி சென்றுள்ளனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் காவல்துறையினர் வாலிபரை துரத்தி வருவதை பார்த்து அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பிறகு அந்த வாலிபரை விசாரணை செய்த போது அவர் ஜோதிபாசு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.