ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நந்தல் மேட்டுப்பாளையத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கிரிஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கடலூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் ஏறி கிரிஜாவின் இருக்கைக்கு அருகாமையில் அமர்ந்துள்ளனர். பின்னர் டிக்கெட் வாங்குவதற்காக தனது கையில் இருக்கும் சில்லரை காசுகளை எடுத்து தருமாறு கிரிஜாவிடம் கேட்டுள்ளார். அதனால் கிரிஜா அந்த பெண்ணிற்கு உதவி செய்துள்ளார்.
அப்போது கிரிஜா கைப்பையில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகையை அந்தப்பெண் திருடி விட்டு தப்பி சென்றுள்ளார். இதனை அறியாமல் இருந்த கிரிஜா பேருந்திலிருந்து இறங்கி கையில் இருந்த பையை பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிரிஜா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.