சாலை வசதி அமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கணாம்புதூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் அரசுப் பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கிராமத்திற்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காட்சியளிக்கிறது. மேலும் மழைபெய்தால் சகதியாகவும் மாறிவிடுகிறது. எனவே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்றை சிறைபிடித்ததோடு, பழுதான சாலையில் நாற்று நட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் பொதுமக்கள் சிறைபிடித்த பேருந்தை விடுவித்துவிட்டு, நாற்று நடும் போராட்டத்தையும் கைவிட்டுச் சென்றனர்.