மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மேல்கரைபட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று காரணமாக கடந்த 1 ஆண்டு காலமாக கல்லூரி திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சூரியகுமார் 4-ஆம் ஆண்டு என்ஜினியரிங் படிப்பை ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து சூரியகுமார் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் அவரது அத்தை மீனாட்சி வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் அத்தை வீட்டிற்கு வந்த இடத்தில் சூரியகுமார் மாயமானார். இதனையடுத்து அவரது அத்தை மற்றும் உறவினர்கள் சிலர் சூரியகுமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
அதன் பின் மீனாட்சி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் அவரை தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகில் சூரியகுமாரின் செருப்பு கிடந்ததை பார்த்து மீனாட்சி அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சூரியகுமாரின் உறவினர்கள் தாராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் சூரியகுமாரின் உடலை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.