தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மினி லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள தே.ரெங்கநாதபுரத்தில் நித்யானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி அலுவலரான இவர் தனக்கு சொந்தமாக மினி லாரி ஒன்றை தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அந்த மினி லாரி திடீரென நேற்று காலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் லாரி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனாலும் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் விரைந்து எரிந்து கொண்டிருந்த தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர். இருப்பினும் லாரி முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. இதுகுறித்து நித்யானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில் தேவாரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.