நூதன முறையில் வாலிபரிடம் இருந்து பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ராஜபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஸ்டூடியோ கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியான எல்.இ.டி.டிவி விளம்பரத்தை ராஜபாண்டியன் பார்த்துள்ளார். இதனை அடுத்து அந்த விளம்பரத்தை பதிவிட்ட நபர் தனது பெயர் அமித் குமார் எனவும், தான் ராணுவத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் அந்த டி.வியை வாங்குவதற்காக ராஜபாண்டியன் பல்வேறு தவணையாக 15,000 ரூபாயை செலுத்திய பிறகும் டி.வி அவருக்கு வரவில்லை.
இதனை தொடர்ந்து அமித் குமார் டி.வியை டெலிவரி செய்ய வேண்டுமெனில் 11 ஆயிரத்து 550 ரூபாய் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜபாண்டியன் மதுரைமாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.