பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை புதரில் வீசி சென்ற பெற்றோர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் நெடுமாறன் நகர் பகுதியில் உள்ள ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அந்த புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு பச்சிளம் குழந்தை துணியில் சுற்றி வீசப்பட்டு கிடந்தது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் அந்த குழந்தையை எடுத்து பார்த்தபோது பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின்படி கிராம நிர்வாக அலுவலர் சாக்கன் மற்றும் டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்தக் குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது. இவ்வாறு பிறந்து 2 நாட்களே ஆன அந்த ஆண் குழந்தையை புதரில் வீசி சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தர்மபுரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் குழந்தை பெற்றெடுத்தவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.