வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு சங்க மாநில பொருளாளர் செட்டியப்பன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாநில பொருளாளர் சக்கரவர்த்தி கலந்து கொண்டு பேசியுள்ளார். இதில் வட்ட தலைவர் கிருஷ்ணன், வட்டச்செயலாளர் திம்மன், மாவட்ட செயலாளர் கரூரான், சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தனது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அதிகாரிகள் அழைத்து உரிய பேச்சுவார்த்தை நடத்தாததால் மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அதன்பின் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டுமென்றும், 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்த பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இவ்வாறு நடைபெற்ற திடீர் சாலை மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.