Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

முடங்கி இருக்கும் பணிகள்…. ஒன்றியக்குழு தலைவர் மீது குற்றச்சாட்டு…. கலெக்டரிடம் மனு….!!

ஏரியூர் ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தனபால் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டர் திவ்யதரிசினியிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில் ஏரியூர் ஒன்றியக்குழு தலைவர் பொறுப்பில் இருக்கும் பழனிச்சாமி என்பவர் துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் கலந்தாலோசிக்காமல் தனியாக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து அவர் பல்வேறு முறைகேடுகள் செய்து வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன்பின் ஊராட்சி ஒன்றியத்தில் தனி நபர்களுக்கு வேலைகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு ஊழல் நடைபெற்றுள்ளது.

மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தலைவரிடம் கேட்டால் முறையான பதில் சொல்வது இல்லை. எனவே ஒன்றியத்தில் உள்ள அனைத்து கட்சி கவுன்சிலர்களும் தலைவருக்கு எதிராக நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் எந்த பணிகளும் நடைபெறாமல் முடங்கி இருக்கின்றது. ஆகவே ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத நிலையில் ஒன்றிய குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இதனைத்தொடர்ந்து ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்வதில் நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன்பின் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தனி அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என்று மனுவில் துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் மீது கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் தலைவர் மீது துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |