சுவிட்சர்லாந்தில், ஒரு இளைஞர் சக பணியாளர்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்ததால் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்.
கடந்த 2020 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில், 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சக பணியாளர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு சிறுவன் நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சிகள் இருந்திருக்கிறது. அந்த வீடியோவை, வாட்ஸ்அப் குழுவில் இருந்த 200 நபர்கள் பார்த்திருக்கிறார்கள். அதில், ஒருவர் இது குறித்து நீதிமன்றத்தில் புகார் அளித்து விட்டார்.
அதன்பின்பு, காவல்துறையினர் விசாரணையை தொடங்கியதில் அந்த சம்பவம் தொடர்பில் வாட்ஸ்அப் குழுவில் இருந்த சிலர் சாட்சி அளித்தனர். எனினும், விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அந்த வீடியோ எந்த நோக்கத்திற்காவும் பகிரப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
எனவே, அந்த இளைஞரை வழக்குகளிலிருந்து விடுவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மீண்டும் சூரிச் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, தற்போது அந்த இளைஞரை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு ஆயிரம் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நீதிமன்ற செலவிற்காக 4500 பிராங்குகள் செலுத்துமாறும் கூறப்பட்டிருக்கிறது. ஒரு வீடியோவை வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பியதால், தற்போது வரை, தான் சேமித்து வைத்திருந்த மொத்த பணம் 12,000 பிராங்குகளையும் செலவு செய்ததாக அந்த இளைஞர் கூறியிருக்கிறார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தான் சுயதொழில் செய்து வருவதால், தனக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எனினும், எதற்காக தன்னை முதலில் விடுவித்தார்கள்? தற்போது மீண்டும் புகாரளித்து, மிகப்பெரிய தண்டனையை வழங்குகிறார்கள் என்று புரியவில்லை என்கிறார்.