2 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்லூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான வாகீஸ்வரர், சென்றாய பெருமாள், கரிய காளியம்மன் கோவில்கள் இருக்கின்றது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த கோவிலுக்கு சுமார் 70 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றது. இந்த நிலங்கள் தனி நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்ததால் கடந்த 2013-ஆம் ஆண்டு கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவில் நிலங்களில் விவசாயம் செய்தவர்கள் குத்தகை செலுத்தவில்லை என்று தெரிகின்றது. இதனையடுத்து குத்தகை செலுத்தாதவர்கள் மீது கோவை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 6 வழக்குகளில் 4 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7.75 ஏக்கர் நிலமும், வாகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.48 ஏக்கர் நிலத்தினையும் கோவில் நிர்வாகம் கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கோவில் நிலத்தை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் அன்னக்கொடி, அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் போன்றோர் மேற்பார்வையில் தக்கார் சந்திரகலா, அந்தியூர் பிரிவு ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் இறுதியில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கோவிலின் நிலம் மீட்கப்பட்டு நிர்வாகம் சார்பில் இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்த கோவில் நிலம் மீட்பு பணியின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.