வெங்காய வியாபாரியை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி நத்தக்காட்டானூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெங்காய வியாபாரியாக இருக்கின்றார். இவருக்கு சொந்தமான குடோன் ஜலகண்டாபுரம் சின்னம்பட்டி சாலையில் இருக்கின்றது. கடந்த 1-ஆம் தேதி செல்வராஜ் குடோனில் இருந்தபோது அவரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து செல்வராஜின் மனைவி சரண்யாவிற்கு அந்த கும்பல் செல்போனில் தொடர்பு கொண்டு உன் கணவர் வெங்காயம் வாங்கியது மற்றும் கொடுக்கல்-வாங்கல் வகையில் 21 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் இல்லை என்றால் அதற்கு நிகராக சொத்தை கிரயம் செய்து தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அப்படி செய்தால் தான் உன் கணவரை விடுவிப்போம் என்று சரண்யாவிடம் அந்த கும்பல் மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் ஒரு நார் மில்லில் செல்வராஜை அவர்கள் அடைத்து வைத்திருந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று செல்வராஜை மீட்டு, அவரை கடத்திய 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு, குல்முகமது, கிஷோர் ஆகிய 4 பேர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.