திருட்டுப்போன 101 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது குறித்து கடந்த 2020-21-ஆம் ஆண்டில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி செல்போன் திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் காவல்துறையினர் திருட்டுபோன செல்போனை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்ட நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 101 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் விஜயகுமார் ஒப்படைத்துள்ளார்.
மேலும் துரிதமாக விசாரணை மேற்கொண்டு செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் காவல்துறையினரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். அதன்பின் செல்போன்களை பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியபோது அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருட்டு, காணாமல் போன செல்போன்கள் குறித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டு வருகின்றது. எனவே மீதமுள்ள புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே பொதுமக்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.