ஜெர்மனி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவத்திற்கும், ஆர்யாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண்ணை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை செய்தனர். அதையடுத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் முகமது ஹுசைனி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அப்பெண் தன்னிடம் பண மோசடி செய்தது நடிகர் ஆர்யா தான் என்றும், அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.
உடனடியாக ஆர்யா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் புகார் அளித்தார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி நடிகர் ஆர்யா காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சந்தித்து பேசினார். இன்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ஆர்யாவை போல் நடித்து ஜெர்மன் பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக இருவரை கைது செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் ஆர்யாவிற்கும், இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமில்லை என்பது தெரிய வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.