கல்லணைக்கால்வாயின் தரம் தொடர்பாக பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் தரைதளம் கட்டப்பட்ட இடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகள் தரம் இல்லை என்று 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள், நீர் ஆதார புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு அமைத்தது. அதன்பின் தஞ்சை மாவட்ட கல்லணை கால்வாய் ஆற்றுநீர் சீரமைக்க ஆசிய உள்கட்டமைப்பு நிதி 1,036 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் 5 தொகுப்புகளாக நடைபெற்றது. இதில் ஒரு தொகுப்பினை கல்லணை கால்வாய் ஆற்றில், புதுப்பட்டினம் முதல் ஈச்சங்கோட்டைவரை சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனம் ஒன்று எடுத்து சீரமைத்துள்ளது.
ஆகவே சென்னையில் தரம் இன்றி கட்டியது போல், கல்லணை கால்வாய் ஆற்றிலும் புனரமைப்பு பணிகளில் தரம் இல்லை என்றும் கல்லணை கால்வாய் ஆற்றில் தரைப் பகுதி மற்றும் இருபுறமும் சிமென்ட் கான்கிரீட்டை கொண்டு சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் பூமிக்குள் இறங்காமல் நீர் கசிவு இல்லாமல், கால்வாய் அருகில் உள்ள கிணறுகளுக்கு தண்ணீர் ஊற்றெடுக்காமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறையின் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த செயற்பொறியாளர் ஸ்ரீதர் ஆதித்தியா, உதவி செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், உதவி பொறியாளர்கள் சரவணன், சீனிவாசன் ஆகியோர் கல்லணை கால்வாயில் ஈச்சங்கோட்டையில் கல்யாண ஓடை புரியும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி. நடராஜன் மற்றும் விவசாயிகள் சிலர் ஆய்வு குழுவினரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கல்லணை கால்வாயில் நடைபெறும் பணிகள் முழுமையான திட்ட மதிப்பீட்டோடு நடைபெற வேண்டும். மேலும் தண்ணீர் தேங்குவதற்குரிய தடுப்புகள் ஏற்கனவே எந்த இடங்களில் இருந்ததோ அந்த இடத்தில் தடுப்புகள் அமைத்து தர வேண்டும். இதனைதொடர்ந்து ஆற்றின் இருபுறமும் போடப்பட்டுள்ள கான்கிரீட்டில் சில இடங்களில் வெடிப்பு இருப்பதால் புதிதாக கான்கிரீட் போட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன்பின் சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் தரமற்றதாக இருப்பதாக செய்திகள் வரும் நிலையில், இந்தப் பணிகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆய்வுக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.