நியூசிலாந்து நாட்டில் தாக்குதலில் ஈடுபட்ட இலங்கையரின் குடும்பத்தினர் தற்போது வேறு நாடுகளில் வசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆக்லாந்து பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் இலங்கையை சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளர்கள் 6 பேரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கத்தியால் குத்திய அந்த நபரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றுள்ளனர். மேலும் கத்தியால் தாக்குதல் நடத்திய அந்த நபர் ஏற்கனவே கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், அவர் ஐ.எஸ் தீவிரவாத குழு ஆதரவாளர் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த நபருடைய பெயர் மற்றும் இதர விவரங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையே நீதிமன்றம் அந்த நபருடைய விவரங்களை வெளியிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீதிபதி வைலி அந்த நபருடைய குடும்பத்தினர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் அவர்களின் அறிவுறுத்தல்களை பெற நேரம் தேவைப்படும் என்பதால் 24 மணி நேர கால அவகாசத்தினை நீட்டிக்க பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.