காரைக்காலிலிருந்து 944 டன் யூரியா உரம் ஈரோடு மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை என 556 உர விற்பனை நிலையங்கள் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் உரத் தேவை அதிகமாக இருக்கின்றது. இதனால் பல்வேறு பகுதியிலிருந்து உரத்தை கொள்முதல் செய்து ஈரோட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் காரைக்காலிலிருந்து 944 டன் யூரியா உரம் ஈரோடு மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளது .
இது தொடர்பாக வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறும்போது, இந்த மாவட்டத்தில் 1,262 டன் யூரியா இருப்பில் இருக்கிறது. மேலும் 2 ஆயிரத்து 366 டன் பொட்டாஷ், 7 ஆயிரத்து 300 டன் காம்ப்ளக்ஸ் உரம், 2 ஆயிரத்து 57 டன் டி.ஏ.பி. போன்றவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே 45 கிலோ எடைகொண்ட ஒரு மூட்டை யூரியா 266 ரூபாய் 50 காசுக்கு மற்றும் சில்லரை உர விற்பனையாளர்கள் அதிகபட்ச விலைக்குள் விற்பனை செய்ய வேண்டும். இதனையடுத்த யூரியா உரத்துடன் வேறு ஏதேனும் சில பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகார்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம்ம், மாவட்ட தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் எண்ணான 0424 2339101-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதன்பின் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் பரிசோதனை செய்து பெறப்பட்ட மண்வள அட்டைகளின் அடிப்படையில் அல்லது வேளாண் துறை பரிந்துரையின்படி உரமிட வேண்டும். மேலும் விவசாயிகள் தேவைக்கு அதிகம் யூரியாவை உபயோகிப்பதை தவிர்த்தல் வேண்டும் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் பயிர்களில் பூச்சித் தாக்குதல் அதிகரிக்க அபாயம் இருக்கிறது என்றும் சின்னசாமி தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து உர விற்பனையாளர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் கொடுக்க வேண்டும் என்று இணை இயக்குனர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.