ஏ.டி.எமில் பணம் எடுக்க வரும் நபர்களை ஏமாற்றி கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சேத்தியாத்தோப்பு போன்ற பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுத்து செல்லும் முதியோர் மற்றும் பெண்களை குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து சென்று வாலிபர் ஒருவர் பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் வாலிபரை பிடிக்க சேத்தியாத்தோப்பு துணை காவல்துறை சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்துள்ளனர். அப்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் சந்தேகப்படும் படி சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் சின்னவளையம் ரோடு தெருவில் வசிக்கும் ஜோதிபாசு என்பதும், ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வந்த 8 நபர்களை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் ஓமாம்புலியூர் கிராமத்தில் வசிக்கும் ராஜாராம் என்பவரிடமிருந்து 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜோதிபாசுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள், 3,68,000 ரொக்கப்பணம் மற்றும் 5 பவுன் தங்க நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.