கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாணவன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் அக்பர் தனது நண்பர்களான யுவராஜ், சதீஷ்குமார், ரீகன், சேக், தமிழ், புருஷோத்தமன் போன்றோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து யுவராஜ், ரீகன், புருஷோத்தமன், அக்பர் ஆகிய 4 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது மற்ற 3 பேர் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது ராட்சத அலை குளித்து கொண்டிருந்த 4 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது. இதனையடுத்து சக மாணவர்களின் சத்தம் கேட்டு மீனவர்கள் கடலுக்குள் குதித்து புருஷோத்தமன், ரீகன், யுவராஜ் 3 பேரையும் காப்பாற்றி விட்டனர். ஆனால் அக்பர் மாயமானதால் அவரை மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணாமல் போன அக்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.