நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த நபரின் பக்கத்து வீட்டார் தான் அவரை மூளைச்சலவை செய்ததாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
ஆக்லாந்தில் இருக்கும் கவுண்ட்டவுன் என்ற பல்பொருள் அங்காடியில், நேற்று முன்தினம் இலங்கையைச் சேர்ந்த நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். எனவே, காவல்துறையினர் அந்த நபரை சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது, அவரது பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இவரின் தாயார், Ismail Fareeda, இது தொடர்பில் கூறியுள்ளதாவது, “இலங்கையிலிருந்து கடந்த 2011ம் வருடம், என் மகன் நியூசிலாந்தில் குடியேறினான்.
அதன் பின்பு, அவனிடம் மாற்றம் ஏற்பட்டது. கடந்த 2016 ஆம் வருடத்தில், Samsudeen கீழே விழுந்ததில், அவன் காயமடைந்தான். அந்த சமயத்தில் தான் சிரியா மற்றும் ஈராக்கை சேர்ந்த Samsudeen-ன் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவனை மூளைச்சலவை செய்தனர். அதன்பின்பே பயங்கரவாத கருத்துக்களை இணையதளத்தில் பதிவிட தொடங்கினான். எனவே, என் மற்ற பிள்ளைகள் Samsudeen-ஐ கண்டித்தனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கறிஞர் மூலமாக, Samsudeen-ன் சகோதரர் ஆரூஸ் என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், Samsudeen-ன் இந்த கொடூர செயலால் மனமுடைந்துவிட்டோம். இதில் காயமடைந்தவர்களுக்கு, எங்களின் அன்பு மற்றும் ஆதரவை அனுப்ப விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.