குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஆவினங்குடி ஊராட்சி 5-வது வார்டில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் பழுது அடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்ய முடியாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது பெண்கள் தங்களின் பகுதிக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது விரைவில் மின் மோட்டார் பழுதை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் கூறியதன் காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.