Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட சிறுமி…. சிறைபிடித்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு மகளிர் கோர்ட்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பாளி ஆண்டிக்காடு தோட்டம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயி தர்மராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி அந்தியூர் எண்ணமங்கலத்தில் உள்ள செலம்பூர் அம்மன் கோவிலில் வைத்து, 15 வயது சிறுமியை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தர்மராஜ் சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.

அதன்பின் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி பவானி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குழந்தை திருமண தடைச்சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின்கீழ் சிறுமியின் தாய், தர்மராஜின் பெற்றோர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அவர் தனது தீர்ப்பில் குற்றவாளி தர்மராஜிக்கு குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாத ஜெயில் தண்டனையும் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தர்மராஜிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக தர்மராஜ் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தண்டனையை தர்மராஜ் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களையும் விடுவிக்க நீதிபதி மாலதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

Categories

Tech |