லாரியில் குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடிக்கு பெங்களூரில் இருந்து சேலம் வழியாக குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி செல்வதாக ஓமலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆர்.சி.செட்டிப்பட்டி என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 40 மூட்டை பான்பராக், 5 மூட்டை குட்கா கம்பளி துணிகளுக்குள் மறைத்து கடத்தி சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் மதிப்பு 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மினி லாரியின் டிரைவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் சலீம், அவருடன் வந்தவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு பான்பராக், குட்கா போன்ற பொருட்களை கடத்தி சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த பான்பராக், குட்கா போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.