இரவில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் வெளியில் இருக்கும் சிமெண்ட் கட்டையில் ஜெயலட்சுமி படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் பயந்து எழுந்த ஜெயலட்சுமி தாலிச் சங்கிலியை பிடித்து கொண்டு திருடன் என சத்தம் போட்டுள்ளார்.
பின்னர் இவரின் சத்தத்தை கேட்டு உள்ளே இருந்த ஜெயலட்சுமியின் மகன் மற்றும் மகள் வேகமாக வெளியே வந்துள்ளனர். இதனை அறிந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் துரத்தி சென்று வாலிபரை மடக்கிப் பிடித்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் தாண்டாம்பாளையம் காலனியில் வசிக்கும் அறிவழகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அறிவழகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.