நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்காக தயாராக இருக்கும் திரைப்படம் ‘பார்டர்’ ஆகும். இந்நிலையில் இந்த திரைப்படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் டோனி சினிமாஸ் சார்பில் சார்லஸ் ஆண்டனி சாம் வழக்கை தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து அவர் கூறியதாவது ” அதாவது ‘பார்டர்’ என்னும் டைட்டிலில் நானும் ஒரு திரைப்படம் தயாரித்து வருகிறேன். மேலும் இதனை நான் தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவும் செய்துள்ளேன். இதற்கிடையில் அதே டைட்டிலில் மற்றொரு திரைப்படம் வெளியாக தயாராக உள்ளதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதனையடுத்து இந்தப்படம் ரிலீஸ் ஆனால் எனக்கு பேரிழப்பு ஏற்படும். இதனால் அருண் விஜய்யின் பட வெளியீடுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி ‘பார்டர்’ திரைப்படகுழுவை சேர்ந்த அனைவரும் வரும் 20 ஆம் தேதிக்குள் இந்த வழக்கிற்கு பதிலளிக்க வேண்டுமென அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக ‘பார்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த அருண் விஜய்யின் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.