தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் முழுமையாக பிடித்தம் செய்யப்படும் என்று அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கேஷாப் மஹந்தா தெரிவித்துள்ளதாவது: கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அப்படி தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். நாளைமுதல் அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் ‘நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்’ என்ற சுய அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இதேபோல் தனியார் அலுவலகங்களும் தங்களுடைய சுய அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்படி தடுப்பூசி போடவில்லை என்றால் ஊழியர்களின் சம்பளம் முழுமையாக பிடிக்கப்படும். மேலும் சுய அறிவிப்பில் பொய்யான தகவல் தரும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த கலெக்டரிடமும் அவர்களின் அதிகார வரம்புக்குள் வரும் அலுவலகங்கள், அதாவது தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்களின் தடுப்பூசி போடப்பட்ட நிலைகுறித்து உறுதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.