மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு பாலமுருகன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் கிளியநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பாலமுருகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.