எண்ணெய் கிணறுகளை இலக்காக வைத்து வீசப்பட்ட ராக்கெட் வெடிகுண்டை சவுதியின் கூட்டுப்படைகள் நடுவானில் இடைமறித்து தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடித்துள்ளது.
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுதி தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த பல வருட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. இந்த உள்நாட்டுப் போரில் அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. இதனையடுத்து சவுதியின் கூட்டுப்படைகள் ஹவுதி தீவிரவாதிகள் மீது வான் வழியாகவும் நிலம் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஹவுதி தீவிரவாதிகள் சவுதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மீது ஆளில்லா விமானம் வீசி தாக்குதல் நடத்துவதையே அவர்களின் வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக சவுதி அரேபியாவிலுள்ள அப்ஹா மற்றும் ஜிசான் நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதாவது சவுதியில் அரம்கோ என்னும் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் மீது ஹவுதி தீவிரவாதிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 50% பெட்ரோல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த மாதம் 31 ஆம் தேதி அப்ஹாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஆளில்லா விமான தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பயணிகள் விமானம் ஒன்றும் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழல் சவுதியில் முடிவதற்க்குள் அதன் கிழக்கே உள்ள தம்மாம் நகரின் எண்ணெய் ஆலைகளை இலக்காக வைத்து தீவிரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டை வீசியுள்ளனர்.
ஆனால் அங்குள்ள கூட்டுப்படைகள் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் உதவியுடன் தீவிரவாதிகள் வீசிய ராக்கெட் வெடிகுண்டை நடுவானில் இடைமறித்து அழித்து அவர்களின் தாக்குதலை முறியடித்துள்ளனர். இதனால் பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராக்கெட் வெடிகுண்டு வெடித்து சிதறி அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்துள்ளது. இதனால் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள 14 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் எண்ணெய் கிணறுகளை இலக்காக வைத்து தீவிரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டை வீசிய அதே சமயத்தில் ஜிசான் மற்றும் நஜ்ரான் நகரங்களிலும் பல ராக்கெட் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. அதனை கூட்டுப்படைகள் நடுவானில் இடைமறித்து அழித்ததாக கூறியுள்ளனர்.
மேலும் இந்த ராக்கெட் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியதற்கு தற்போது வரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஹவுதி தீவிரவாதிகளாதான் இருபார்கள் என்று கூட்டுப்படைகள் கூறியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து சவுதி அரேபியாவின் தேசிய பாதுகாப்பு படை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “சவுதிவில் உள்ள நிலம் மற்றும் புலன்களை பாதுகாக்க எங்கள் அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். பின்னர் பொதுமக்களை பாதுகாப்பதற்காக மனித உரிமை சட்டத்திற்கு உட்பட்டு இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எங்கள் அமைச்சகம் எடுக்கும்” என தெரிவித்துள்ளது.