தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் செப். 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.. இருப்பினும் உள்ளட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது..
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.. இந்த ஆலோசனையில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.. அனைத்து கட்சியினரும் தங்களது கருத்துக்களை இந்த ஆலோசனையின் போது தெரிவித்தனர்..
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.