லண்டனில், பேருந்து ஓட்டுநர் மீது எச்சிலைத் துப்பியதோடு மோசமாக பேசிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனில் வெம்ப்ளே ஸ்டேடியத்திற்கு அருகில், ரூட் 83 என்ற பேருந்தில், ஒரு நபர் முகக்கவசமின்றி ஏறியிருக்கிறார். எனவே, ஓட்டுனர் அவரை முகக்கவசம் அணியுமாறு கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் முகக்கவசம் அணியவில்லை. எனவே, மீண்டும் ஓட்டுனர் அவரிடம், முகக்கவசம் அணியவில்லை என்றால் பேருந்திலிருந்து இறங்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அப்போது, பேருந்திலிருந்து இறங்கச் சென்ற அந்த நபர், திடீரென்று ஓட்டுனருக்கு அருகில் சென்று அவர் மீது எச்சிலைத் துப்பிவிட்டு, மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியிருக்கிறார். எனவே, அந்த ஓட்டுனர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். தற்போது, அந்த நபரின் சிசிடிவி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, இந்த கொரோனா காலகட்டத்தில், ஆபத்தை எதிர்கொண்டு தான் ஓட்டுனர்கள், மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடக்கும் செயல்களை ஏற்க முடியாது. எனவே, இந்த நபர் பற்றி தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். மேலும், பல வழிகளை கையாண்டும், தற்போது வரை இந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.