சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்குரார்குட்டை பகுதியில் தனிப்படை காவல்துறையினருக்கு பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு கைலி அணிந்துகொண்டு மாறுவேடத்தில் சென்றுள்ளனர். அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் குறிச்சிக்கோட்டை பகுதியில் வசிக்கும் கஞ்சிமலை, செந்தில், ரங்கநாதன், தியாகராஜன், இளவரசன், வீரமுத்து ஆகியோர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 6 சேவல்கள், ரூ.9000, 6 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.