ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி காபூல் நகரை தலீபான்கள் தங்களின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்க அவர்கள் தீவிர முனைப்பில் இருந்தனர். ஏற்கனவே இதற்கு முன்பாக அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் உரிமைகளும் பறிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் பர்தா அணியாமல் வெளியே வரக்கூடாது.
மேலும் பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்வோ அனுமதிக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதிலும் அவர்களின் சட்டத்தை மீறுபவர்களுக்கு மரண தண்டனையும் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை தலீபான்கள் தாமாகவே முன் வந்து எங்கள் ஆட்சியில் பழைய கட்டுப்பாடுகள் இருக்காது என்று கூறியுள்ளனர். மேலும் பெண்களை பள்ளி மற்றும் வேலைக்கு அனுப்புவோம் என்றும் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் பல்கலைக்கழக வகுப்பறையில் ஆண்களும் பெண்களும் தனித் தனியாக அமர வேண்டும்.
அவர்களுக்கு இடையில் திரை இருக்கக்கூடும். இதனை தொடர்ந்து பெண்கள் கண்டிப்பாக எப்பொழுதும் பர்தா அணிய வேண்டும். அதிலும் பெண்களுக்கு பெண் ஆசிரியை தான் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் வகுப்புகள் முடிந்து வெளியேறிய பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து தான் ஆண்கள் வெளிவர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் தலீபான்கள் பஞ்சஷீர் மாகாணத்தையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டதால் ஆப்கான் மக்கள் பீதியில் உள்ளனர்.