தமிழகத்தில் சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் காந்தி வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி 10% உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கதர், பாலிவஸ்திரா ரகங்களை மக்கள் அறிந்துகொள்ள ரூபாய் 20 லட்சம் செலவில் விளம்பரப்படுத்தப்படும். இதை தொடர்ந்து சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளிலும் கைத்தறி வேட்டி, சேலை ரகங்களுக்கு விளம்பரங்கள் தரப்படும் என்று அவர் கூறினார். பின்னர் திண்டுக்கல் சின்னாளபட்டியில் 6 கோடி ரூபாய் செலவில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.