சீனாவில் ஒரு பெண் தூக்கமின்மை நோயினால் இருக்கிறார் என்பதை பரிசோதனையின் மூலம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி ஜானிங். இவர் தன்னுடைய ஐந்து வயதிலிருந்து ஒருமுறை கூட தூங்கியதில்லை என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். இதற்கிடையில் அவருக்கு தூக்கமின்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இவரை சோதிக்க முயன்றுள்ளனர். ஆனால் சோதிக்க முயன்ற அனைவரும் இரவில் தூங்கி போயுள்ளனர். குறிப்பாக லி ஜானிங் மட்டும் தூக்கமின்றி சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். இது மட்டுமின்றி அவரது கணவரும் என் மனைவி தூங்குவதை நான் இதுவரை கண்டதில்லை என்று உறுதியாக கூறியுள்ளார். மேலும் ஊரே தூங்கி கொண்டு இருக்கும் பொழுது லி ஜானிங் மட்டும் வீட்டை சுத்தம் செய்து கொள்வது, பராமரிப்பது போன்ற வேலைகளில் ஆர்வம் காட்டி வருவாராம்.
இதனையடுத்து தனது மனைவியின் தூக்கமின்மையைக் கண்டு கவலையடைந்த அவரது கணவர் தூக்க மாத்திரைகளையும் லி ஜானிங்க்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இருப்பினும் அந்த மாத்திரைகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து மருத்துவர்கள் அவரை தீவிர பரிசோதனையில் ஈடுபடுத்தியுள்ளனர். இதன் பிறகு சோதனையில் அவர் தூங்குகிறார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, லி ஜானிங் தனது கணவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரது கண்ணிமைகள் மூடுவதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது அவர் தூக்கத்தில் இருப்பதை சுட்டிக் காட்டுவதாகவும் மேலும் அவர் பேசிக்கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதிலும் நாளொன்றுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் அவரது கண்கள் மூடவில்லை என்பது மருத்துவர்கள் சோதனையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.