அதிக வகையான மீன்களை பிடித்து வந்ததால் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடலூரில் உள்ள துறைமுகத்திலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகளில் ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்துள்ளனர். இங்கே கொண்டு வருகின்ற மீன்களை அனைத்து மாநில,மாவட்ட வியாபாரிகளும் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிக அளவில் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து மீன்களை பொதுமக்கள் வாங்கி கொண்டு செல்கின்றனர். அதன்பின் துறைமுகத்தில் கனவா, இறால், சங்கரா மற்றும் பாறை மீன் வகைகளின் வரத்து அதிகமாக இருந்துள்ளது.
இதனையடுத்து மீன் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் அணிந்து மீன்களை வாங்கிச் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதுநகர் மீன் அங்காடி, மீன் துறைமுகம், பக்தவச்சலம் மீன் மார்க்கெட் மற்றும் காரைக்கால் பகுதியில் விற்கப்படுகின்ற மீன்களை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் ஆய்வாளர்கள் சுப்ரமணியன், சந்திரசேகரன், நல்லதம்பி ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.
இதில் மீன்களில் பார்மலின் எனப்படும் ரசாயனம் கலக்கப்பட்டு இருக்கிறதா அல்லது கெட்டுப் போன மீன்கள் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் மீன்கள் அனைத்தும் சரியான முறையில் விற்பனை செய்ய படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கெட்டுப்போனது மற்றும் கலப்படம் இருக்கின்ற மீன்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.