தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. பள்ளி திறந்த பிறகுதான் கொரோனா பரவுகிறது என்று கூறுவது தவறான கருத்து என்றும், ஏற்கனவே அறிகுறி இருந்தவர்களுக்கு பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எந்த பள்ளிகளில் கொரோனா பதிவாகின்றதோ அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தமிழகத்தில் நாமக்கல், அரியலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அரசு தனியார் மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கும் கொரோனா ஏற்பட்டதைத் அடுத்து பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொற்று உறுதியாகி உள்ள மாவட்டங்களில் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.