வாட்ஸ் அப் நிறுவனம் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக அளவில் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இந்த நிலையில் முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியில் உள்ள புரொஃபைல் புகைப்படம், இறுதியாக ஆன்லைன் வந்தது போன்ற தகவல்களை பயனாளர்கள் தாங்கள் விரும்பாதவர்களுக்கு காண்பிக்க இயலாத வகையில் அமைத்துக் கொள்ளும் புதிய வசதியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானது. அதாவது தற்போது உள்ள வாட்ஸ் அப் செயலியில் கடைசியாக ஆன்லைனில் வந்தது, புரொஃபைல் புகைப்படம் போன்ற தங்களைப் பற்றிய சுயவிவரங்கள் அனைத்தையும் அனைவரும் பார்க்கலாம் அல்லது தொலைபேசியில் எண் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்.
இல்லையெனில் எவரும் பார்க்க முடியாது என்று மூன்று வகைகள் மட்டுமே இருந்தது. ஆனால் ஒரு சிலர் மட்டும் பார்க்க முடியாத அல்லது பார்க்கும் வகையில் வசதியில்லை. இது பயனாளர்களுக்கு பல இன்னல்களை தந்தது. இந்த நிலையில் இது போன்ற இன்னல்களை தவிர்க்கவும் பயனாளர்களின் புரொஃபைல் புகைப்படம் மற்றும் அவர்களை பற்றிய தகவல்களை ஒரு சிலர் பார்க்க இயலாத வகையில் அமைக்கும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதி மூலம் வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களின் சுயவிவரங்கள் மற்றவர்களுக்கு அதாவது நாம் விரும்பாதவர்களுக்கு தெரியாதவாறு அமைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.