கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைதலைவர் சுகுமாறன் தலைமையில், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர்கள் சக்திவேல், சந்திரசேகரன், ஒன்றிய தலைவர்கள் செல்லத்துரை, ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், தாமோதரன், ரெங்கநாதன் போன்றோர் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மனு கொடுக்க 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதனை விவசாயிகள் ஏற்காமல் கலெக்டர் அலுவலக வாயில் வரை சென்று பின் மனு கொடுக்க 5 பேர் மட்டும் செல்வதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகளை உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர். அதன்பின் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாயில் வரை சென்று கோஷங்களை எழுப்பினர். அப்போது டெல்டா மாவட்டத்தில் கடந்த வருடம் பெய்த மழையினால் சம்பா நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தும் இதுவரை சரியான இழப்பீடு கொடுக்கவில்லை.
எனவே பிரமீயம் செலுத்திய இப்கோ டோக்கியோ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் நஞ்சை நிலம், விளைநிலத்தை அரசால் கையகப்படுத்துவது ரத்து செய்ய வேண்டும். அதன்பின் விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு அத்துமீறி காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அறுவடை நடந்து வருவதால் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறந்து குவிண்டாலுக்கு 2,500 ரூபாய்க்கும், கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் விலையும் நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.