கிராம மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மோவூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு யானைக்கால், வைரஸ் காய்ச்சல், மலேரியா நோய் போன்றவைகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றவும், தெருக்களின் இருபுறமும் வடிகால் வசதி செய்து தர வேண்டும் மற்றும் மயானத்திற்கு செல்கின்ற பாதைகளை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது கிராம மக்களிடம் தங்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அந்த உறுதியின் காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.