அலுவலகத்தில் ஊழியர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மருதுபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உதவி வரைபடவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மருதுபாண்டியன் வழக்கம் போல் வேலைக்கு வந்துள்ளார். அப்போது மருதுபாண்டியன் அலுவலகத்தில் வைத்து திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் மருதுபாண்டியனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருதுபாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காலையில் மருதுபாண்டியன் அலுவலகத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து மருதுபாண்டியன் மேலதிகாரியிடம் தனக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் மேலதிகாரி விடுமுறை கொடுக்க மறுத்ததால் விரக்தியடைந்த மருதுபாண்டியன் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருதுபாண்டியன் தற்கொலை முயற்சிக்கு இது தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.