சின்ன கலைவாணர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மரணம் திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 27ஆம் தேதி எங்க சிரிங்க பார்ப்போம் என்ற நிகழ்ச்சி வெளியானது. காமெடி நடிகர் விவேக், சிவா ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர். விவேக் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி இதுதான். விவேக்கின் கடைசி நிகழ்ச்சி இது என்பதால் பலரும் இதனை விரும்பி பார்த்தனர்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “நடிகர் விவேக் இறப்பதற்கு முன் அவரை வைத்து படம் இயக்குவதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவர் எங்க சிரி பார்ப்போம் என்ற ஓடிடி நிகழ்ச்சி வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். அதுதான் எங்கள் கடைசி உரையாடல். இன்று ஓடிடியில் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது அவர் கூறியது எனக்கு நினைவுக்கு வருகின்றது” என கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.