பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த 2-ஆம் தேதி ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. இதனால் இளவரசன் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.
இதனையடுத்து இளவரசனின் வங்கிக் கணக்கு மற்றும் பணபரிமாற்றம் செயலி மூலம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 345-ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சயடைந்த இளவரசன் சைபர்கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.