ஓடும் பேருந்தில் நகையை திருடிய இளம் பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கே.புதூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள பந்தல்குடி பகுதிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தப் பேருந்தில் ஒரு பெண் 2 குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த சில்லரையை சிதற விட்டு செல்வராணியை எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.
இதனை அடுத்து அந்தப் பெண் பாளையம்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கி சென்று விட்டார். அதன் பின்னர் செல்வராணி கையில் வைத்திருந்த பையை அந்த பெண் திருடி சென்றது தெரியவந்துள்ளது. அந்தப் பையில் 7 பவுன் தங்க நகை இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.